புனித கஃபா, மதீனாப் பள்ளிகளில் 600க்கும் மேற்பட்ட பெண் பாதுகாப்பு அதிகாரிகள் பணியில்!

கிராண்ட் மசூதி மற்றும் நபி மசூதியின் விவகாரங்களுக்கான சவுதி பொது பிரசிடென்சியில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 600க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அந்த நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மகளிர் மேம்பாட்டு விவகாரங்களுக்கான உதவி பொதுத் தலைவர் டாக்டர் அல் அனூத் பின்த் காலித் அல் அபோத், பெண்கள் மேம்பாட்டு விவகார ஏஜென்சிக்கு தலைமை தாங்குகிறார். இந்த நிறுவனத்தின் கீழ் பல நிறுவனங்கள் செயல்படுகின்றன.

தொழில்நுட்ப விவகாரங்களுக்கான உதவி, டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் பெண்களுக்கான செயற்கை நுண்ணறிவு, பொது உறவுகள் மற்றும் ஊடக விவகாரங்களுக்கான உதவி உள்ளிட்ட பணிகளுக்கு இந்த நிறுவனம்தான் பெண் பணியாளர்களை பணியமர்த்துகிறது.

இந்த நிலையில், புகழ் பெற்ற மசூதிகளில் பெண் பணியாளர்கள் எண்ணிக்கையை இந்த ஏஜென்சி, 600ஆக உயர்த்தியுள்ளது. இதற்காக ஏற்கனவே அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இதற்கான மாற்றங்கள் ஏற்பட்டன. இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மற்றும் மதீனாவில் பாதுகாப்புக்காக சவுதி பெண் வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.

ராணுவ காக்கி சீருடை அணிந்த பெண்கள் முதன்முறையாக மக்கா கிராண்ட் மசூதியின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நடவடிக்கை உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது. மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதி-கானா-இ-காபாவிற்கு வரும் பெண் யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சேவை செய்வதற்காக நூற்றுக்கணக்கான பெண்கள் பணியமர்த்தப்பட்டனர்.

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் நாட்டில் செயல்படுத்தப்படும் விஷன் 2030 திட்டங்களின் ஒரு பகுதியாக, பல புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக, சவுதி பாதுகாப்பு அமைச்சகம் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பல்வேறு ராணுவ பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்தது.

2019ம் ஆண்டில், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் விஷன் 2030 என்ற கொள்கையை வெளியிட்டார். பெண்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் சவுதிப் பெண்களை வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிப்பது, தங்கள் குழந்தைகளின் பிறப்பைப் பதிவு செய்தல் மற்றும் வேலைவாய்ப்பு பாகுபாடுகளுக்கு எதிராக புதிய பாதுகாப்புகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க மகளிர் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.’ ஒரு பக்கம் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். வீட்டிலிருந்து வெளியே வரக் கூடாது என்கிறார்கள். இஸ்லாம் பெயரை பயன்படுத்தி தாலிபான்கள் இவ்வாறு கட்டுப்பாட்டை அமல்படுத்துவோம் என்கிறார்கள். ஆனால் இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா, பெண்களுக்கு சம உரிமை கொடுப்பதுதான் சரி என்று உலகிற்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. (Thanks to OneIndian Tamil)

இதையும் படிங்க : கத்தார் விமான நிலையத்தில் அத்தையை வழியனுப்ப பாதுகாப்பு அதிகாரியிடம் மழலை மொழியில் அனுமதி கேட்ட குழந்தை (VIDEO)

Leave a Reply