கொரோனா அபாய பகுதிகளுக்கு பயணித்தால் 3 வருடங்கள் பயணத்தடை ! சவுதி அரேபியா பிரஜைகளுக்கு எச்சரிக்கை

கொரோனா அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லும் தங்களது குடிமக்களுக்கு 3 ஆண்டுகள் பயணத் தடை விதிக்கப்படும் என்று சவூதி அரேபியா அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுக்குச் சொந்தமான சவூதி பிரஸ் ஏஜென்சி (எஸ்பிஏ) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா அபாயப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நாடுகளுக்குப் பயணம் செல்வது, நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் சவூதி அரசின் வழிகாட்டுதல்களையும் மீறும் குற்றமாகும். எனவே, அண்மையில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அபாயப் பகுதிகள் பட்டியலில் சோ்க்கப்பட்ட நாடுகளுக்கு சவூதி குடிமக்கள் யாரும் செல்லக் கூடாது என்று உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தப் பட்டியலில் இந்தியா, துருக்கி, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, லெபனான், யேமன், ஆா்மீனியா, எத்தியோப்பியா, சோமாலியா, காங்கோ, வெனிசூலா, பெலாரஸ், வியத்நாம் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

அரசின் வழிகாட்டுதல்களை மீறி, தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு யாரேனும் சென்றால், அவா்களுக்கு மிகப் பெரிய தொகை அபராதம் விதிக்கப்படும். அத்துடன், 3 ஆண்டுகளுக்கு அவா்கள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

கொரோனா அபாயப் பட்டியலில் இல்லாத நாடுகளுக்கு தங்களது நாட்டு மக்கள் சென்றாலும், அங்கு நோய்த்தொற்று அதிகம் காணப்படும் பகுதிகளை அவா்கள் தவிா்க்க வேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது என்று எஸ்பிஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை நிலவரப்படி, சவூதி அரேபியாவில் 522,108 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 8,200 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 11,380 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதையும் படிங்க : தனது 10 வயது மகனை வெட்டிக் கொன்ற தந்தைக்கு சவுதியில் மரணதண்டனை நிறைவேற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *