கத்தாரின் 50வது அமீர் கிண்ண இறுதிப்போட்டி கலீஃபா சர்வதேச கால்ப்பந்து அரங்கில்!

50வது அமீர் கிண்ணத்தின் இறுதிப் போட்டி 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை கலீஃபா சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறும் என கத்தார் உதைப்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. 2022 உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ள கத்தார் மண்ணின் இவ் விளையாட்டரங்கம் பல மறக்க முடியாத ஆட்டங்களையும், சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் கண்ட ஓர் அரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டு பிஃபா உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளை நடாத்த தயாராக இருக்கும் கலீஃபா சர்வதேச விளையாட்டரங்கம் மிகவும் புகழ்பெற்ற ஒரு விளையாட்டரங்கமாகப் பார்க்கப்படுகிறது.

இவ்விளையாட்டரங்கின் நீண்ட நெடிய வரலாற்றில் முக்கியமான பல சுற்றுத் தொடர்கள், போட்டிகள் மற்றும் பல விசேட நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன .இவற்றில் மிக முக்கியமாக நான்கு,பதினொன்று மற்றும் இருபத்தி நான்காவது அரபு வளைகுடா கிண்ணப் போட்டிகள், 2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா, 2011 AFC ஆசியக் கிண்ணம் மற்றும் கத்தார் கால்பந்து மற்றும் விளையாட்டுப் போட்டி இன்னும் வரலாற்றில் இன்று வரை பிரபலமாக நிலைத்திருக்கும் வேறு பல சிறப்பு வாய்ந்த நிகழ்வுகள் என்பன நடைபெற்றுள்ளன.

கத்தார் 2022 உலகக் கிண்ண போட்டிகளுக்கான தயார்படுத்தலில் ஒரு பகுதியாக கலிஃபா சர்வதேச விளையாட்டரங்கம் கடந்த சில வருடங்களாக பிஃபா ( FIFA) கிளப் உலகக் கிண்ண போட்டிகள் உட்பட அதன் மறு சீரமைப்புக்குப் பிறகு பல சர்வதேச நிகழ்வுகளை நடாத்தி இருக்கிறது.

1976ஆம் ஆண்டு அல்-ரய்யான் நகரில் நிர்மாணிக்கப்பட்ட கலீஃபா சர்வதேச விளையாட்டரங்கமானது, கத்தாரின் விளையாட்டுப்பாரம்பரியத்தின் மைல்கல்லாகவும், வளமான எதிர்காலத்தின் ஊற்றுக்கண்ணாகவும் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது.

40,000 ஆசனங்களைக் கொண்டுள்ள இவ்விளையாட்டரங்கம் ஏனைய முக்கிய நிகழ்வுகளுக்கு மத்தியிலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் , அரபு உலகக்கிண்ணம் மற்றும் ஆசிய கிண்ணப் போட்டிகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றுக்கு வரவேற்பளித்தமையினால் இவ்வரங்கு சிறப்பு வாய்ந்த வரலாற்றுப் பெருமையினை தன்னகத்தே கொண்டுள்ளது.

காலப்போக்கில் இவ் விளையாட்டரங்கு மத்திய கிழக்கின் அனைத்து விளையாட்டுத் துறைகளிலும் தனது உச்சத்தை பிரதிபலிக்கக் கூடிய ஒரு பெறுமதி வாய்ந்த தூதரகமாக உருப்பெற்றது.

கலீஃபா சர்வதேச விளையாட்டரங்கு கத்தார் வாழ் மக்களின் ஒரு பழைய தோழனாகவும் ,சமூகங்களை ஒன்றிணைக்கக் கூடிய ஒரு நெருக்கமான முகவராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாருக்குள் கடத்தப்படவிருந்த 3500 போதை மாத்திரைகள் அதிகாரிகளால் பறிமுதல்!

Leave a Reply