கத்தார் சாலையில் சாகசம் காட்டிய ஓட்டுநர் கைது, கார் நசுக்கி அழிப்பு! (வீடியோ)

MoI impounds vehicle for illegally drifting down a main road in Qatar

கத்தார் நகர சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் “லேண்ட் க்ரூஸர்” கார் டிரைவர் ஒருவர் சாகசங்களைச் செய்தார். இதனை சிலர் வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.

பின்பு இந்த வீடியோ பல்வேறு சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வந்ததை அடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

விசாரணையைத் தொடர்ந்து, ஸ்டண்ட் செய்த கார் மற்றும் ஓட்டுனர் இருவரும் கண்காணிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாகசம் செய்த டிரைவர், கட்டுப்பாட்டினை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த ட்ரக் ஒன்றின் மீது மோதிவிட்டு நிற்காமல் பறந்து ஓடி விடும் வீடியோ காட்சி, கத்தார் நாட்டின் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைப்பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

இந்த குற்றச் செயல் மீது நீதிமன்ற வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கவனக் குறைவாகவும் பிறரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்படியாக வண்டி ஓட்டியதால், ஓட்டுநரைக் கைது செய்யவும், வாகனத்தை பறிமுதல் செய்வதற்கும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, காரை ஓட்டிய டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட அவரது வாகனம், RED GIANT எனப்படும் பெரிய அரவை இயந்திரத்தில் இட்டு பொடிப்பொடியாக நசுக்கி அரைக்கப்பட்டது.

கத்தார் நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்ட காணொளியில் இதைக் காணலாம்.

கத்தார் நாட்டில் போக்குவரத்துச் சட்டம் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அலட்சியமாக சாலையில் வாகனத்தை ஓட்டுவோருக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.

முன் அனுமதி பெறாமல், சாலைகளில் நடக்கும் இத்தகைய ஸ்டண்டுகளால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இத்தகைய விதி மீறல்களுக்காக மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும் ஐம்பதாயிரம் ரியால்கள் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது.

கத்தார் நாட்டின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக, பாரபட்சம் ஏதுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கத்தார் நாட்டின் அமைச்சகம் மீண்டும் அறிவித்துள்ளது.

(நன்றி – இந்நேரம்.காம்)

Also Read: கத்தார் சாலையில் சாகசம் காட்டிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது! (வீடியோ)

Leave a Reply