Restaurant shut down for preparing food items in toilet more than 30 years
சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் இயங்கி வரும் உணவகம் சமோசா உள்ளிட்ட தின்பண்டங்களை கழிவறையில் தயாரித்து மக்களுக்கு விநியோகித்த சம்பவம் அந்நாட்டு மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் உணவகம் அது. திடீரென அந்த உணவகம் செயல்படும் விதம் குறித்து சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் அந்த உணவகத்தை ஆய்வு செய்தனர். அப்போதுதான் அதிகாரிகளுக்கு அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்தது. 30 ஆண்டுகளாகவே அந்த உணவகத்தில் சமோசா உள்ளிட்ட தின்பண்டங்களை கழிவறையில் தயாரித்து வந்திருக்கின்றனர்.
அதுமட்டுமல்ல, பூச்சிகள் எலிகள் மிகுந்திருந்த அந்த சுகாதாரமற்ற முறையில் இருந்திருக்கிறது. அதைவிடக் கொடுமை என்னவென்றால் இரண்டு வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட இறைச்சி மற்றும் சீஸ் ஆகியவற்றை பயன்படுத்தியிருக்கின்றனர். இதையறிந்து அதிர்ச்சியடைந்த ஜித்தா நகரின் அதிகாரிகள் உடனடியாக அந்த உணவகத்தை மூட உத்தரவிட்டனர்.
சவுதி அரேபியாவில் உணவங்கள் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவது கண்டறியப்பட்டு மூடப்படுவது புதிதல்ல . ஏற்கெனவே ஜித்தா நகரில் உள்ள ஷவர்மா உணவகம் ஒன்றில் ஷவர்மா மீது எலி அமர்ந்து அங்கிருக்கும் இறைச்சியை உண்ணும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
பலரும் அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்ததையடுத்து அந்த உணவகம் மூடப்பட்டது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து சவுதி அதிகாரிகள் சுமார் 2,833 உணவகங்களை ஆய்வுசெய்தனர். அதில் 43 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு இதுவரை 26 உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். (Vikatan)
இதையும் படிங்க: கத்தாரில் நோன்புப் பெருநாள் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டன