சவுதி அரேபியா, COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த, ரமதான் மாதத்திற்கு முன்னர் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நோன்பு காலத்தில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே புனித மக்காவிற்குச் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று ஹஜ், உம்ரா விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.
COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை 2 முறை போட்டுக்கொண்டவர்கள், பயணத்துக்குக் குறைந்தது 2 வாரங்களுக்கு முன்னதாக முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள்; கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தோர் என 3 வகையான அனுமதி வழங்கப்படவுள்ளது.
மதினா நகரில் உள்ள பள்ளிவாசலுக்குச் செல்வதற்கும் அந்த விதிமுறைகள் பொருந்தும். ரமதான் காலத்தில் தொடங்கும் விதிமுறைகள் எவ்வளவு நாள்கள் நடப்பில் இருக்கும் என்பது குறித்துத் தகவல் அளிக்கப்படவில்லை.
சவுதி அரேபியாவில் இதுவரை 393,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,700 மரணங்கள் பதிவாகியுள்ளன.
34 மில்லியனுக்கும் அதிகமானோர் வசிக்கும் சவுதி அரேபியாவில் இதுவரை 5 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருப்பதாய் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
(நன்றி – செய்தி)