2022 உலக கோப்பை கால்பந்து நவ 20 நாளை ஆரம்பம்: கோலாகல கொண்டாட்டத்துக்கு தயாரான கத்தார்…!!

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடக்கிறது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. நாளை இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கத்தார்- ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையொட்டி கத்தாரில் 32 அணியினரும் முகாமிட்டுள்ள நிலையில் ரசிகர்களும் குவியத் தொடங்கி விட்டனர்.

அங்குள்ள ரசிகர் பூங்காவில் ஆட்டம் பாட்டம் என்று குதூகலத்தில் திளைக்கிறார்கள். ஒட்டுமொத்த கத்தார் தேசமும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆங்காங்கே வானுயர கட்டிடங்களில் நட்சத்திர வீரர்களின் புகைப்படங்கள் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. கால்பந்து கொண்டாட்டத்துக்கு தயாராக உள்ள கத்தார் ரசிகர்கள் உற்சாகமாக பொழுதை போக்க நிறைய ஏற்பாடுகளை செய்துள்ளது. உலக போட்டிக்காக கத்தார் செய்துள்ள செலவினம் மற்றும் வசதி வாய்ப்புகள் சில வருமாறு:-

* இந்த போட்டிக்காக கத்தார் செலவிடும் மொத்தத் தொகை ரூ.17 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வேறு எந்த உலக கோப்பை போட்டியிலும் இவ்வளவு தொகை செலவிடப்பட்டதில்லை. இந்த போட்டியை நடத்தி முடிப்பதன் மூலம் கத்தாருக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* போட்டியை நேரில் பார்க்க சுமார் 15 லட்சம் வெளிநாட்டு ரசிகர்கள் வருகை தருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. * உலக கோப்பை போட்டிக்காக 100-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. 31,123 ஓட்டல் அறைகள் தயாராக உள்ளன. இவற்றில் 80 சதவீதம் வீரர்கள், சிறப்பு விருந்தினர்கள், பிபா அதிகாரிகளுக்காக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

* 3 சொகுசு கப்பலில் தங்கும் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் உள்ள அறையில் தங்குவதற்கு வாடகை அதிகமாகும். ஒரு இரவுக்கு ரூ.38 ஆயிரம் கொடுக்க வேண்டி இருக்கும். அண்டை நாடுகளிலும்…

* உலக கோப்பை போட்டிக்காக கூடாரம் போன்று 6 ஆயிரம் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு வாடகை ரூ.16 ஆயிரமாகும்.

* அண்டை நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன் ஆகிய நாடுகளிலும் நிறைய ரசிகர்கள் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த நாடுகளில் இருந்து கத்தாருக்கு அடிக்கடி விமானம் இயக்கப்பட உள்ளது.

* உலக கோப்பை டிக்கெட் வைத்துள்ள ரசிகர்கள் அங்கு மெட்ரோ ரெயில் மற்றும் பேருந்துகளில் டிசம்பர் 23-ந்தேதி வரை கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம். (தினதந்தி)

Also Read: ஃபீபா கால்ப்பந்து கோப்பை 2022 : ரசிகர்களுக்கான கத்தாரின் விதி முறைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *