முகமது நபி குறித்து அவதூறான கருத்து | இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பிய கத்தார்!

Qatar summons Indian Ambassador statements against Prophet Muhammad

Qatar summons Indian Ambassador statements against Prophet Muhammad

முகமது நபி  குறித்து பாஜக பிரதிநிதிகள் தெரிவித்த அவதூறான கருத்து தொடர்பாக ஈரான், கத்தார் மற்றும் குவைத் நாடுகள் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி உள்ளன. அவதூறாக பேசிய பிரதிநிதிகள் மீது பாஜக சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கத்தாரை தொடர்ந்து ஈரான் மற்றும் குவைத் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சம்பந்தப்பட்ட நாடுகளில் இயங்கி வரும் இந்திய தூதரகத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவதூறான கருத்தை தெரிவித்த பாஜக-வின் நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்தும், நவீன் குமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது அந்த கட்சி. மூன்று அரபு நாடுகளும் சம்மன் அனுப்பி உள்ள நிலையில் அதன் பின்னணியை விரிவாக பார்ப்போம்.

என்ன நடந்தது?
கடந்த வாரம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் முகமது நபி குறித்து அவதூறான கருத்தை தெரிவித்திருந்தார் பாஜக செய்தித் தொடர்பாளராக செயல்பட்டு வந்த நுபுர் சர்மா. தொடர்ந்து முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து, பின்னர் அதனை நீக்கி இருந்தார் பாஜக-வின் நவீன் குமார். அதனை எதிர்த்து இஸ்லாமியர்கள் சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சில கடைக்காரர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என தெரிகிறது. அதனால் அந்த பகுதியில் வன்முறை வெடித்தது. அது தொடர்பாக கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது அம்மாநில காவல்துறை. இந்த நிலையில் தான் மூன்று நாடுகளும் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.

‘பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ – குவைத்:
தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளதை ட்வீட் மூலம் உறுதி செய்துள்ளது குவைத். இந்தியாவை ஆட்சி செய்து வரும் கட்சியின் பிரதிநிதி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அவதூறு கருத்துகளை கண்டிப்பதாகவும், நிராகரிப்பதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது குவைத்.

இந்த விவகாரம் தொடர்பாக ‘பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளது குவைத். இது தொடர்ந்தால் வெறுப்புணர்வை அதிகரிக்க செய்யும் எனவும் குவைத் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரான் சம்மன்:
இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முகமது நபி குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. இதனை அந்த நாட்டு ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

கத்தார் கண்டனம்:
இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு கத்தார் உட்பட அரபு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கண்டனம் தெரிவித்துள்ளது அந்த நாட்டு அரசு. இத்தகைய இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளை தொடர்ந்து அனுமதிப்பது வன்முறையை வெடிக்க செய்யும் என கண்டனம் தெரிவித்துள்ளது கத்தார்.

பாஜக-வின் நடவடிக்கை என்ன?
இது தொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், “ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் பல்வேறு மதங்கள் தோன்றி, செழிப்பாக வளர்ந்துள்ளன. பாஜக அனைத்து மதத்தையும் மதிக்கிறது. எந்த ஒரு மதத்தையும், அதன் கடவுளரையும் அவமதிப்பதை பாஜக வண்மையாக கண்டிக்கிறது. பிற மதத்தை நிந்தனை செய்யும் எந்த ஒரு சித்தாந்தத்தையும் பாஜக ஊக்குவிக்காது. அத்தகைய நோக்குடன் செயல்படும் நபர்களையும் ஊக்குவிக்காது. இந்திய அரசியல் சாசனம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் விரும்பும் மதத்தை பின்பற்றும் உரிமையை வழங்கியுள்ளது. இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில் நாட்டை அனைவரும் சமமாக வாழும், அனைவரும் சமமான மாண்பைப் பெறும் வளமிக்க நாடாக மாற்ற நாங்கள் முயற்சிக்கிறோம். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு முக்கியம். அப்போது தான் அனைவருமே வளத்தின், வளர்ச்சியின் கனியை சுவைக்க முடியும்” என்று விளக்கியுள்ளது.

அரபு நாடுகளில் இந்திய பொருட்களை புறக்கணிப்பது, இந்திய திரைப்படங்களுக்கு தடை வேண்டும் என சமூக வலைத்தளங்களில் முழக்கத்தை முன்னெடுத்துள்ளனர் கொதிப்படைந்துள்ள அந்த நாடுகளின் நெட்டிசன்கள். (இந்து தமிழ்)

இதையும் படிங்க: கத்தாரில் விற்பனையாளரை (பெண் ) அவமதித்தவருக்கு இரண்டு வாரம் சிறை! 5000 ரியால்கள் அபராதம்!

Leave a Reply