கத்தார் அறிமுகப்படுத்தவுள்ள தானியங்கி பஸ்ஸின் சோதனையோட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன. கத்தார் போக்குவரத்து அமைச்சு, மொவாசலாத் (கர்வா) மற்றும் கத்தார் பவுன்டேன் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து கத்தாரின் தானியங்கி பஸ்ஸின் சோதனையோட்ட நிகழ்வுகளை கத்தார் பவுன்டேன் வளாகத்தில் இன்று (02.01.2022) ஆரம்பித்துள்ளது.
இந்த தானியங்கி பஸ் சேவையானது பூச்சிய சதவீத புகையை (கார்பன்) கூட வெளியிடாது என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10 நாட்களுக்கு கத்தார் பவுன்டேன் வளாகத்தில் சோதனையோட்டங்கள் நடைபெறவுள்ளன. மொவாசலாத் (கர்வா) சோதனையோட்ட நிகழ்வுகளுக்கு பொறுப்பாக செயற்படவுள்ளது. சோதனையோட்டத்தின் போது முன்வரையறை செய்யப்படட 3.2 கிலோ மீற்றர் தூரம் மற்றும் 25 km/h வேகத்தில் சோதனையோட்டம் நடைபெறும்.
இந்த சோதனையோட்டத்தின் பாதையாக கத்தார் தேசிய நூலகம், Carnegie Mellon பல்கலைக்கழகம், Texas A&M பல்கலைக்கழகம், Northwestern பல்கலைக்கழகம் என்றவாறு அமையவுள்ளது.
இந்த தானியங்கி சிறிய ரக பஸ்ஸானது, ராடர், லேசர் தொழில்நுட்பம், மற்றும் உயர் கெமரா தொழில்நுட்பம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. வாகன ஓட்டுநர் இன்றி சுற்றுச் சூழலை சுயமாக அடையாளம் காணும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. என்றாலும் சோதனையோட்டத்தின் போது பாதுகாப்பு ஆபரேட்டர் ஒருவர் காணப்படுவார் என்பதாக கர்வா நிருவாகம் தெரிவித்துள்ளது.
கத்தாரின் விஷன் 2030ஐ நோக்கிய பயணத்தில் புதிய தொழில்நுட்ப வசதிகள் அனைத்து துறைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சுற்றுச் சூழலுக்கு ஒரு சதவீதம் கூட பாதிப்பு அற்ற தானியங்கள் பஸ் சேவையானது எதிர்காலத்தில் கத்தாரின் பொதுப் போக்குவரத்து துறையில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும் என்பதாக கர்வா நிருவாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கத்தார் அறிமுகப்படுத்தவுள்ள தானியங்கி இலத்திரனியல் மினி-பஸ் வண்டிகள், சோதனையோட்டம் வெற்றி!