தனது ஆறு பெண் பிள்ளைகளை வைத்தியர்களாக்கிய கத்தாரில் பணிபுரிந்த கேரள தம்பதி!

“ஐந்து பெண்களை பெற்றால் அரசனும் ஆண்டி’ என்பார்கள். அதனைப் பொய்யாக்கி இருக்கிறார்கள் அகமது – ஸைனா தம்பதி. ஆறு மகள்களை பெற்று… அவர்களை ஆறு மருத்துவர்களாகவும் ஆக்கி இருக்கிறார்கள். இது எந்தவொரு புனைவு கதையும் இல்லை. ஒரு குடும்பத்தின் வெற்றிக் கதை’. இது குறித்து மருத்துவர்களின் தாயார் சைனா பகிர்ந்து கொண்டவை:

“”நாங்கள் கேரளத்தின் கோழிக்கோடை அடுத்துள்ள நடப்புரத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கு 12 வயதாகும் போதே திருமணம் நடந்தது. அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். படிப்பு பாதியில் நின்றதில் எனக்கு மிகவும் வருத்தம். அப்போது கணவர் சென்னையில் வியாபாரம் செய்து வந்தார். சில ஆண்டுகள் கழித்து மூத்த மகள் ஃபாத்திமா பிறந்தாள். மகள் பிறந்ததும், சென்னை வியாபாரத்தை நிறுத்திவிட்டு, கணவர் வளைகுடா நாடான கத்தார் சென்றார். அங்கே குரூட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வேலையில் சேர்ந்தார். சிறிது நாளில் எங்களையும் அழைத்துக் கொண்டார். அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தன.

பிறந்த ஆறு குழந்தைகளும் பெண்கள். உற்றார் உறவினர் அதிர்ந்து போனார்கள். “எப்படி ஆறு மகள்களைக் கரை சேர்க்கப் போகிறாய்…’ என்று கேட்கத் தொடங்கினார்கள். கணவர் அகமது கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. சஞ்சலப்படவில்லை. ஆறு மகள்களை சுமையாக நினைக்கவில்லை. ஆண்டவனின் அன்பளிப்பாக நினைத்தார்.

“மகள்களை பிற பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக ஆக்குவேன்…” என்று சொல்லிவந்தார். கத்தாரில் படிக்க வைத்தோம். இரவில் அனைவரும் சேர்ந்து அமர்ந்து பேசுவோம். அப்போது கணவர் மகள்களிடம் படிப்பின் அவசியத்தை எடுத்துச் சொல்வார்.

பள்ளியில் என்ன நடந்தது… ஆசிரியர்கள் என்ன கேள்வி கேட்டார்கள்.. என்ன பதில் சொன்னாய்’ என்றெல்லாம் கேட்பார். மகள்களின் பொது அறிவு வளர பல புத்தங்கங்களை வாங்கி வருவார். படித்து காண்பிப்பார். மகள்களையும் படிக்கச் சொல்வார். கடவுள் அருளால் மகள்கள் எல்லாருமே நன்றாகப் படித்தார்கள்.

கணவருக்கு டாக்டராகணும் என்று ஆசை. அது நடக்கவில்லை. தம்பியை டாக்டராக்கணும் என்று முயற்சி செய்தார். அதுவும் நடக்கவில்லை. அதனால் மூத்த மகள் ஃபாத்திமாவை டாக்டராக்க வேண்டும் என்று முயன்று வெற்றி பெற்றார். அக்காவைப் பார்த்து தங்கைகள் டாக்டரானார்கள். முதல் நாலு மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது.

மருமகன்கள் டாக்டராகத்தான் இருக்க வேண்டும்… அப்போதுதான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்கள். வேலைப் பளுவையும் புரிந்து கொள்வார்கள்… அதே சமயம் மகள்களுக்கு வரதட்சணை தர மாட்டேன்… மகளை விற்று அனுப்ப எங்களுக்கு விருப்பம் இல்லை..’ என்று உறுதியாக இருந்தார். அவர் நினைத்தது போலவே நான்கு மருத்துவர்களே மருமகன்களாக கிடைத்தார்கள்.

ஐந்தாம் மகள் சென்னையில் மருத்துவம் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். கடைசி மகள் மங்களூரில் மருத்துவம் முதல் ஆண்டு படிக்கிறாள்.

35 ஆண்டுகள் கத்தாரில் பணி புரிந்துவிட்டு நாங்கள் கேரளம் திரும்பினோம். வந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கணவர் மாரடைப்பால் இறந்து போனார். அப்போது, முதல் இரண்டு மகள்களுக்கு மட்டுமே திருமணம் நடந்திருந்தது. குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு எனக்கு வந்து சேர்ந்தது. மூன்றாம், நான்காம் மகள்களுக்குத் திருமணம் செய்து வைத்தேன். கடைசி இரண்டு மகள்களை பள்ளிப் படிப்பிலிருந்து மருத்துவம் வரை படிக்க வைத்தேன். கடைசி மகள் மருத்துவம் படித்து முடித்ததும், எனது கணவரின் மருத்துவக் கனவு நிறைவேறும்.

மூத்த மகள் மருத்துவத்தில் மேல்படிப்பு படித்து முடித்திருக்கிறாள். லண்டனில் பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது.

எங்களை டாக்டர்களாக்கியது அப்பாவும், நீங்களும் தானே… அப்பா இப்போது இல்லை. அதனால் லண்டனுக்கு என்னுடன் அம்மா வந்தாகணும் என்கிறாள்’ என்கிறார் ûஸனா. (நன்றி – தினமனி)

இதையும் படிங்க : கத்தாரில் மூன்று நாட்களுக்குத் தொடரவுள்ள மூடுபனிக் காலநிலை!

Leave a Reply