தங்கத்தை மிஞ்சிய நட்பு: ஒலிம்பிக் உயரம் பாய்தலில் தங்கத்தைப் பகிர்ந்த கொண்ட கத்தார், இத்தாலி வீரர்கள்

Olympic High hump Gold Medal

உலகம் முழுவதும் நேற்றுமுன்தினம் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்ட நேரத்தில், ஒலிம்பிக்கில் நட்பை உயர்த்திப் பிடிக்கும் சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. உயரம் தாண்டுதலில் கத்தார், இத்தாலி வீரர்கள் இருவரும் தங்கத்தைப் பகிர்ந்துகொண்டு தங்களின் நட்பு தங்கத்தை விட உயர்ந்தது என நிரூபித்துள்ளனர்.

கத்தார் நாட்டின் முதாஸ் பார்ஷிம், இத்தாலியின் கியான்மார்கோ தம்பேரி ஆகியோர்தான் தங்கப் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். களத்தில் இரு வீரர்களும் எதிர் எதிர் நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்களாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் இருவரும் சிறந்த நண்பர்கள். இரு வீரர்களுக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது ஒலிம்பிக்கில் அரிதான நிகழ்வாகும்.

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டி நேற்று நடந்தது. இதில் கத்தார் நாட்டு வீரர் முதாஸ் பார்ஷிம், இத்தாலியின் கியான்மார்கோ தம்பேரி, பெலாரஸ் வீரர் மாக்சிம் நெடாசேகு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதில் முதாஸ் பார்ஷிம், கியான்மார்கோ இருவரும் 2.37 மீட்டர் உயரத்தைத் தாண்டி ஒரே புள்ளிகளைப் பெற்றனர். 2.39 மீட்டர் உயரத்தைத் தாண்டுவதற்கு இருவரும் 3 முயற்சிகள் செய்தும் அதில் இருவரும் 3 தவறுகளைச் செய்தனர். இதையடுத்து, இறுதியான வெற்றியாளரைக் கண்டுபிடிக்க கடைசியாக தாண்டுதலை நடத்த நடுவர் முடிவு செய்தார்.

அப்போது, ஒலிம்பிக் போட்டி நடுவரிடம் பார்ஷிம், “ இரு தங்கப்தக்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா, இருவரும் தங்கத்தை ஷேர் செய்ய முடியுமா” எனக் கேட்டார்.
இதற்கு நடுவரும் தங்கத்தைப் பகிர்ந்து அளிக்க சம்மதம் தெரிவித்தார். இதைக் கேட்டவுடன் பார்ஷிம், கியான்மார்கோவும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

கடந்த 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலமும், ரியோவில் வெள்ளியும் வென்றவர் பார்ஷிம். ஆனால், கடந்த 2018-ம் ஆண்டில் காலில் ஏற்பட்ட காயத்தால் பெரும்பாலும் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. அந்த நேரத்தில் பார்ஷிம் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாடவருவதற்கு கியான்மார்கோ பெரும் ஆதரவு அளித்துள்ளார்.

தங்கப்பதக்கம் குறித்து பார்ஷிம் கூறுகையில், “இது எனக்குக் கனவு போன்றது. இதிலிருந்து கண்விழிக்க நான் விரும்பவில்லை. இந்த நாளுக்காகத்தான் 5 ஆண்டுகள் காத்திருந்தேன். பல காயங்கள் பின்னடைவுகள். இன்று இருவரும் இந்த தருணத்தைப் பகிர்ந்துகொண்டோம். இது உண்மையில் மதிப்பு மிகுந்தது” எனத் தெரிவித்தார்.

பெலாரஸ் வீரர் மாக்சிம் நெடாசேகுவுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

2010-ம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் போட்டி கனடாவில் நடந்ததில் இருந்து பார்ஷிம், தாம்பேரி இருவரும் சிறந்த நண்பர்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரின் நட்பு தொடர்ந்து வருகிறது. களத்தில் இருவரும் போட்டியாளர்களாக இருந்தாலும் வெளியே சிறந்த நண்பர்கள் என்பதை ஒலிம்பிக்கிலும் நிரூபித்துவிட்டனர். (இந்துதமிழ்)

Leave a Reply