இலங்கையிலிருந்து அமீரகத்திற்கு பயணிப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமாகவுள்ள இலங்கையைச் சேர்ந்த பணியாளர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரெபிட் பிசிஆர் (Rapid PCR) பரிசோதனைக் கூடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ.சானகவினால் குறித்த பரிசோதனை கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள 7 பிராந்திய விமானநிலையங்களுக்கு பிரவேசிப்பதற்கு 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை பயணிகள் தம்வசம் வைத்திருந்தல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை கடந்த 5ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியம் நீக்கியிருந்தது.

எனினும், தமது நாட்டுக்கு தொழிலுக்காக பிறநாடுகளிலிருந்து வருகைத்தரும் பணியாளர்கள் ரெபிட் பிசிஆர் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அண்மையில் திடீர் நிபந்தனையொன்றை விதித்தது.

எனினும் அவ்வாறான வைத்திய பரிசோதனை வசதிகள் இலங்கையில் காணப்படாமையினால் பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தி சேவை முன்னர் வெளிப்படுத்தியிருந்தது.

இந்தநிலையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதனால் பயணிகள் 4 மணித்தியாலங்களுக்கு முன்னரே விமானநிலையத்திற்கு வருகை தருமாறு கோரப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை மற்றும் விமான பயணச்சீட்டு என்பனவும் இந்த பரிசோதனைக்கு அவசியமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணித்தியாலத்தில் இயந்திரமொன்றில் நான்கு பேருக்கான பரிசோதனைகள் மேற்கொள்ள முடியும்.

இந்தநிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவ்வாறான 6 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பின்வரும் வாகனங்களை கத்தார் சந்தையிலிருந்து நீக்க வர்த்தக அமைச்சு உத்தரவு

Leave a Reply