கத்தார் – தோஹா, லுசெய்ல் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (10) இரவு நடைபெற்ற ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் கத்தார் ஜோர்தான் அணியை 3-1 என்ற அடிப்படையில் வெற்றிபெற்று கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2019 ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் சம்பியனான கத்தார், 2023ம் ஆண்டுக்கான கிண்ணத்தையும் வென்று அசத்தியுள்ளது.
ஆசிய கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றுள்ள ஜோர்தான் முதல் முயற்சியிலேயே கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்று களம் இறங்கியிருந்தது.
2023 ஆசிய கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் அடுத்தடுத்து 2 தடவைகள் சம்பியனான அணிகள் பட்டியலில் ஐந்தாவது நாடாக கத்தார் பதிவாகியுள்ளது.
ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தில் 16 அணிகள் சுற்று என அழைக்கப்படும் முன்னோடி கால் இறுதிப் போட்டியில் பலஸ்தீனத்தை 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கால் இறுதியில் உஸ்பெகிஸ்தானை 1 (3) – 1 (2) என்ற பெனல்டி முறையிலும் அரை இறுதியில் ஈரானை 3 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கத்தார் வெற்றிகொண்டிருந்தது.
முன்னோடி கால் இறுதிப் போட்டியில் ஈராக்கை 3 – 2 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் கால் இறுதிப் போட்டியில் தஜிகிஸ்தானை 1 – 0 என்ற கோல் வித்தியாசத்திலும் அரை இறுதிப் போட்டியில் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்திலும் ஜோர்தான் வெற்றிகொண்டிருந்தது.
ஆனால், நடப்பு சம்பியன் கத்தாரை அதன் சொந்த மண்ணில் குறிப்பாக அதன் ஆதரவாளர்கள் முன்னிலையில் வெற்றிகொள்வது இலகுவானதல்ல என ஜோர்தான் பயிற்றுநர் அம்மூட்டா தெரிவித்து இருந்தார்.
போட்டி நடைபெற்ற லுசைல் மைதானத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Also Read: கத்தார் தேசிய விளையாட்டு தினம் என்றால் என்ன? அது கொண்டாடப்படுவது ஏன்?