கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர ஆட்டக்காரர் என போற்றப்படுபவர் லயோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த வீரர். ஆனாலும் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், எதிர்வரும் கத்தார் உலகக் கோப்பை தொடர் தான் தனது கடைசி தொடர் என அவர் தெரிவித்துள்ளார்.
35 வயதான மெஸ்ஸி, கடந்த 2005 முதல் தன் தேசிய அணிக்காக சர்வதேச களத்தில் விளையாடி வருகிறார். இதுவரை மொத்தம் 164 போட்டிகளில் விளையாடி 90 கோல்களை பதிவு செய்துள்ளார். இது அர்ஜென்டினா அணிக்காக மட்டும் அவர் பதிவு செய்துள்ள கோல்கள். இது தவிர தன் அணியின் வீரர்கள் பல கோல்களை ஸ்கோர் செய்ய அசிஸ்ட் செய்த சம்பவங்களிலும் அவருக்கு பங்குண்டு. இதுவரை நான்கு உலகக் கோப்பை தொடரில் அவர் பங்கேற்று விளையாடி உள்ளார். கத்தார் உலகக் கோப்பை தொடர் அவர் பங்கேற்கும் ஐந்தாவது தொடராகும்.
“நிச்சயம் இது எனது கடைசி உலகக் கோப்பை தொடர். இந்த தொடர் தொடங்க உள்ள நாட்களை நான் கணக்கிட்டு வருகிறேன். கொஞ்சம் பதட்டமாக உள்ளது. என்ன நடக்க போகிறது? எனது கடைசி தொடர் எப்படி அமைய உள்ளது? என்னால் அந்த தருணத்திற்காக காத்திருக்க முடியவில்லை. அதே நேரத்தில் அது சிறப்பானதாக அமைய வேண்டும்.
உலகக் கோப்பை தொடரில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒவ்வொரு போட்டியும் கடினமானது. எப்போதும் ஃபேவரைட் அணிகள் வெல்வது கடினம். அர்ஜென்டினா ஃபேவரைட் அணியா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் எங்களது அணியின் வரலாறு அந்த பட்டியலில் உள்ளது. எங்களை விட சிறந்த அணிகள் இந்த தொடரில் உள்ளன” என மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.