Sri Lanka

இலங்கையிலிருந்து வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு அடுத்த வாரம் தடுப்பூசி

விசாவுடன் வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்பும் அனைவருக்கும் அந்த நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை வழங்க விசேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது, ​​சுமார் 15 நாடுகளில் பணி அனுமதி மற்றும் விசா வழங்கப்பட்ட கிட்டத்தட்ட 8,000 இலங்கை தொழிலாளர்கள் அந்த நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி உள்ளிட்ட சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்தார்.

அதன்படி, குறித்த தொழிலாளர்கள் டுபாய், பஹ்ரைன், ஜோர்தான், குவைத், லெபனான், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், தென் கொரியா, மாலத்தீவுகள், மலேசியா, இஸ்ரேல் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்ல உள்ளனர்.

ஃபைசர் தடுப்பூசி அந்த நாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மருந்தாக இருப்பதால், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் அனைவருக்கும் ஃபைசர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க சுகாதார அமைச்சர் உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, அடுத்த வாரம் கொழும்பு மத்திய நிலையம் ஒன்றில் அவர்கள் அனைவருக்கும் முதல் தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கும் திட்டமிட்டபடி இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக் கொடுத்து, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அவர்கள் வௌிநாடு செல்ல தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல உள்ள பலர் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: