கத்தாரிலிருந்து இலங்கைக்கு திரும்பிய இருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது!

சமூகவலைத்தளங்கள் ஊடாக கடும்போக்குவாத சிந்தனைகளை பரப்பிய குற்றச்சாட்டு தொடர்பில், காத்தான்குடியைச் சேர்ந்த இருவரை, பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (TID) கைது செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இன்றையதினம் (02) இக்கைது இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடியைச் சேர்ந்த 28, 29 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 21ஆம் திகதி கத்தாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட 6 பேரில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஏனைய இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் வெல்லம்பிட்டி மற்றும் திஹாரியைச் சேர்ந்த இருவர் நேற்றுமுன்தினம் (31) TID யினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்களை உள்ளடக்கிய ‘வன் உம்மாஹ்’ எனும் வட்ஸ்அப் குழுமம் ஒன்றை, குறித்த 6 பேரும் இணைந்து கத்தாரிலிருந்தவாறு ஆரம்பித்து, அதில் ஸஹ்ரானின் கொள்கைகள் உள்ளிட்ட பல்வேறு கடும்போக்குவாத மற்றும் வஹாபிஸ கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள சம்பிரதாய முஸ்லிம்களின் எண்ணத்திலிருந்து வேறுபட்ட கருத்துகளை இதன் மூலம் பரப்பி வந்துள்ளதாகவும், அது தொடர்பில் வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் பகிர்ந்துள்ளமை தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், கத்தாரிலிருந்தவாறு ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும், அதன் காரணமாக, கத்தார் அரசினால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதனைத் தொடர்ந்தே அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

குறித்த சந்தேகநபர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கொழும்பிலுள்ள TID யில் தடுத்து வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

(நன்றி – தினகரன் பத்திரிகை -03.04.2021)

Leave a Reply