விமானத்தில் பயணிகள் பேஜர், வாக்கி-டாக்கி கொண்டு வரக்கூடாது.. தடை விதித்த கத்தார் ஏர்வேஸ்!

Qatar Airways bans pagers walkie-talkies

பெய்ரூட் விமான நிலையத்திலிருந்து விமானங்களில் வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களை எடுத்துச் செல்ல கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தடை விதித்துள்ளது. லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலின் போது ஆயிரக்கணக்கான மின்னணு சாதனங்கள் வெடித்ததை அடுத்து, லெபனான் சிவிலியன் ஏவியேஷன் இயக்குநரகம் அறிவுறுத்தலின்படி இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது.

இந்நிலையில் செப்டம்பர் 17 ஆம் தேதி பிற்பகலில் லெபனானில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த 100க்கும் அதிகமான பேஜர்கள் அடுதடுத்து வெடித்துச் சிதறின. இதில், ஹிஸ்புல்லா அமைப்பினர் உள்பட 12 பேர் பலியாகினர். 2500க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். ஹிஸ்புல்லா பிரதிநிதி அலி அம்மாரின் மகன் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, அடுத்த நாள் மீண்டும் லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில், 10க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகினர். லெபனானில் மின்னணு கருவிகளின் வாயிலாக தாக்குதல் சம்பவம் நடைபெறுவதால் அந்த நாட்டு மக்கள் போனை பார்த்தே பயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொடர் சம்பவங்களின் எதிரொலியாக லெபனான் சிவிலியன் ஏவியேஷன் இயக்குநரகம் பெய்ரூட்டில் இருந்து இயங்கும் விமான நிறுவனங்களை பயணிகளிடம் வாக்கி-டாக்கிகள் மற்றும் பேஜர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யுமாறு கேட்டுக்கொண்டது. அத்தகைய மின்னணு சாதனங்கள் விமானம் மூலம் அனுப்பப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெய்ரூட் ராஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BEY) புறப்படும் பயணிகள் பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்தது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களுடனோ, தாங்கள் கொண்டு வரும் பைகளுடனோ, பேஜர், வாக்கி டாக்கி ஆகியவற்றை வைத்திருக்க அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமூகமான பயணத்தை உறுதிசெய்ய பயணிகள் இந்த விதிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். (https://tamil.oneindia.com/)

Also Read: கத்தார் நீங்கள் இதைச் செய்து சிக்கினால் 10000 ரியால்கள் அபராதம், 2 வருட சிறைத்தண்டனை கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *