கத்தாரில் பொதுப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் அனைத்து பஸ் வண்டிகளும் மின் சாரத்தில் இயங்கும் இலத்திரனியல் பஸ்களாக மாற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கத்தார் பொதுப் போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது, கத்தார் கடந்த 2022ம் ஆண்டு பொதுப் போக்குவத்திற்காக பயன்படுத்தப்படும் தெரிவு செய்யப்பட்ட கர்வா பஸ் வண்டிகளை மின்சாரத்தில் இயக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்று முதல் இன்று வரை படிப்படியாக இலத்திரனியல் பஸ் வண்டிகளின் எண்ணிக்கை 900 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் கத்தாரிலுள்ள அனைத்து பொதுப் போக்குவரத்து பஸ் வண்டிகளும் இலத்திரனியல் பஸ் வண்டிகளாக மாற்றப்படும் என்றார்.
கத்தார் வானொலிக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இது பற்றி கருத்து தெரிவிக்கும் போது,
“நாங்கள் பேருந்துகளை தயாரிப்பதற்காக ஓமானில் உள்ள ஒரு நிறுவனத்துடன் ஒருங்கிணைந்திருக்கின்றோம். மேலும் எலெக்ட்ரிக் பஸ்களை வழங்க சீனாவிலிருந்து தருவிக்கின்றோம்.
மின்சார பேருந்துகளின் பொருளாதார நன்மை குறித்து அவர் கூறுகையில், டீசலில் இயங்கும் பேருந்துகளை விட பேட்டரி மூலம் இயங்கும் மின்சார பேருந்துகள் பராமரிப்பு செலவு குறைவு என்றார்.
மேலும், தற்போது கத்தாரின் 74 விழுக்காடு பஸ் வண்டிகள் இலத்திரனியல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. மேலும் கர்வா டெக்ஸிகளில் 30 விழுக்காடு தற்போது இலத்திரனியல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. எதிர்வரும் 2030ம் ஆண்டுக்குள் கத்தாரின் பொதுப் போக்குவரத்து துறையை முழுமையான இலத்திரனியல் மயப்படுத்தவுள்ளோம் என அவர் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.