ஆப்கானின், 100 பயணிகள் கொண்ட முதல் பயணிகள் விமானம் காபூலில் இருந்து புறப்பட்டு வெற்றிகரமாக கத்தாரில் தரையிறங்கியது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியதையடுத்து, ஆப்கானில் நடைபெற்ற உள்நாட்டு போர், தாலிபான்கள் காபூலை கைப்பற்றிய நிலையில் முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து தாலிபான்களுக்கு பயந்து ஆப்கானில் இருந்து வெளிநாட்டு மக்களும், ஆப்கான் மக்களும் வெளியேறி வந்தனர். தாலிபான்கள், காபூலை கைப்பற்றினாலும் காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்க படைகள் வசமே இருந்தது.
ஆனால் கடந்த 31 ஆம் தேதி, தோஹா ஒப்பந்தத்தின் படி, அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில், காபூல் விமான நிலையம் தாலிபான்களின் வசம் வந்தது.
இந்நிலையில், நேற்று காபூல் விமான நிலையத்தில் இருந்து 100 பயணிகள் கொண்ட, முதல் பயணிகள் விமானம் கத்தாருக்கு புறப்பட்டது. அதில் 13 இங்கிலாந்து நாட்டவரும் இருந்தனர். ஆப்கானில் நிலவிய பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இந்த பயணம் குறித்து செய்தியாளர்களிடம் கத்தார் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது கூறும்போது, காபூலில் இருந்து ஆப்கான் விமானத்தை புறப்பட அனுமதித்ததற்காக தாலிபான்களுக்கு பாராட்டை தெரிவித்தார்.
மேலும் ஆப்கானில் இருந்து பயணிகளுடன் முதல் விமானம் பத்திரமாக தரையிறங்கியதற்காக தாலிபான்களுக்கு நன்றியை தெரிவித்ததோடு, தாலிபான்கள் சொன்னதை செய்கிறார்கள் என்றும் நாங்கள் எதிர்பார்த்தும் இது தான் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அதோடு இது ஒரு நல்ல தொடக்கம் என்றும், இதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும் கூறினார்.
இதனையடுத்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் எமிலி ஹார்ன், தாலிபான்கள், நெகிழ்வுத்தன்மையைக் காட்டியுள்ளனர் என்றும், இது ஒரு நேர்மறையான முதல்படி என்றும் கூறினார்.
ஆப்கான் அரசின் இந்த முயற்சிகளை தொடர்ந்து, மேலும் பல நாடுகளும் தங்கள் விமான சேவையை ஆப்கானுக்கு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (Thanks to q7news.com)
Also Read : மருந்துப் பொருட்களுடன் கத்தார் பயணிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!