கத்தாரில் வாகன ஓட்டுநராக பணிபுரிவோருக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கைச் செய்தியொன்றை தெரிவித்துள்ளது. அதாவது வாகன ஓட்டுநர்கள், இப்தாருக்கு முன் அதிவேகமாக வாகனங்களை செலுத்துவது தொடர்பாக தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக வாகன ஓட்டுநர்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வாகன சாரதிகள், பாதையில் பயணிக்கும் ஏனைய பயணிகளின் பாதுகாப்புக்கான வீதி வரம்புகளைக் கட்டாயம் கடைபிடிக்கும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரமழான் காலத்தில், வாகனம் செலுத்தும் போது சறுக்குதல், பொறுப்பற்ற விதத்தில் வாகனத்தைச் செலுத்துதல், அதிக வேகம் ஆகியவை தொடர்பாக அதிகம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து போலிஸார் உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளதாகவும், போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக போக்குவரத்து துணை இயக்குநர் ஜாபர் முகமது ரஷீத் ஒடாய்பா அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, இப்தார் நேரங்களில் உரிய இடங்களை சென்றடைய வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றாது பயணிப்பது தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பாக எமது எச்சரிக்கையை தெரிவித்துக் கொள்கிறோம். இப்தார் நேரத்தின் போதும், ஸஹர் வேளையின் போது, உரிய இடங்களில் நிறுத்தி அவற்றை நிறைவேற்றும் படி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் வாகனம் செலுத்தும் போது கைத்தொலைபேசி பாவனையை முற்றாக தவிர்ந்து கொள்வதோடு, சீட் பெட்களை அணிந்து கொள்ளும் படியும் வலியுறுத்தினார்.
இப்தார் வேளைகளில் வீதி விபத்துக்களை தடுக்கவே வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறையால் இப்தார் உணவுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. எனவே வாகன ஓட்டுநர்கள் உணவைப் பெற்று உரிய இடங்களில் வாகனத்தை நிறுத்தி நோன்பைத் திறக்க முடியும் என்பதாக அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் சறுக்கல், பொறுப்பற்ற விதத்தில் வாகனத்தை செலுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 3000 றியால்கள் வரை அபராதம் விதிக்கப்படுவதோடு, 3 மாதங்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும். அத்துடன், இது போன்ற முறையற்ற செயற்பாடுகளின் போது பொதுச்சொத்துக்களுக்கு ஏற்படுகின்ற சேதங்களுக்கு உரிய நபரே பொறுப்பாவார் என்பதாக உதவி இயக்குநர் ஜாபர் முகமது ரஷீத் ஒடாய்பா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.