மத்திய கிழக்கு இலங்கை திரும்புபவர்களுக்கான இலவச தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை!

கொவிட் – 19 நிலைமைகள் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களை துரிதமாக நாட்டிற்கு அழைத்து வருவதற்காக தனியார் ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலா ஓய்விடங்களை ஒன்றிணைத்து வழிமுறை ஒன்றை ஏற்படுத்துமாறு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, தனியார் பிரிவிலுள்ள 10 சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் ஓய்விடங்கள், தனிமைப்படுத்தல் நிலையங்களை ஸ்தாபிப்பதற்காக தேசிய கொவிட் நோய்த்தடுப்புக்கான படையணியின் அனுமதியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

குறித்த 10 நிலையங்கள் ஊடாக ஒரேமுறையில் 571 பேருக்கு தனிமைப்படுத்தல் வசதிகள் வழங்கப்படவுள்ளன. இதன்போது ஹோட்டல் கட்டணம், உணவு, குடிபானம் மற்றும் ஏனைய வசதிகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளன.

குறித்த தனிமைப்படுத்தல் வசதிகளுக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் வாரமொன்றுக்கு 18 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

மேலும் குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவர் தங்குவதற்காக நாளொன்றுக்கு 4500 ரூபாய் பணம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் செலுத்தப்படுகிறது. இந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒரு நபரை ஒரு வாரகாலத்திற்கு மட்டுமே தங்க வைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ( அரசாங்க தகவல் திணைக்களம்)

Leave a Reply